Saturday, July 14, 2012

வேப்பிலையும் வெல்லமும்


வெகுகால நண்பனான கார்த்தியின் ஊருக்கு செல்லவேண்டும் என்பது என் அவா. பலமுறை செல்ல நினைத்தும்  செல்ல இயலவில்லை. அவனுக்கு என்னிடம் கோபித்துகொள்வதே அவனது அன்றாட வழக்கமாக இருந்தது. கடைசியில் ஒருநாள் அந்தநாளும் அமைந்தது, இந்தியாவின் பொருளாதார நெருக்கடி வடிவில். எனக்கு வழங்கப்பட்ட மூவாயிரம் சம்பளத்தை கட்டுப்படுத்தினால் இந்தியாவின் பொருளாதாரத்தை தூக்கி நிலைநிறுத்தி விடலாம் என்று நினைத்தாரோ என்னவோ என் மேலதிகாரி, செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கு ஈயப்படும் என்ற வள்ளுவர் கூற்றை போலல்லாமல் செலவுக்கு பணம் இல்லாத போதும் சிறிதேனும் வயிற்றுக்கு கிடைக்கும் அலுவலக உணவுக்கு வேட்டு வைத்தார் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி. 

ஆகவே வேலையும் பறிபோய் விட்டதால் அவனது ஊரை நோக்கி புறப்பட்டேன் அரசுபேருந்து மார்க்கமாக. நண்பனின் ஊர் நெல்லை அருகில் களக்காடு பக்கம் ஒரு குக்கிராமம். நெல்லையை அடைந்ததும் வேடனின் அம்பு தைத்த பறவையை போல மனது படபடவென்று அடித்துகொண்டது. முதன்முறை அவனது வீட்டிற்கு  செல்கிறோம் கையில் வேறு காசில்லையே? அவர்களுக்கு ஏதாவது வாங்கித்தர வேண்டுமே என்று. அவனுக்கு தெரியும்  எனது நிலைமை , ஆயினும் அவனது வீட்டு பிஞ்சுகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று  இல்லையே? நெல்லை பேருந்து நிலையத்தை அடைந்ததும் குழாயடியில் முகம் கழுவிவிட்டு வெளியிலிருக்கும் பலகாரக்கடைகளை நோட்டமிட்டேன். "ஏ வாங்க அண்ணாச்சி திருநெல்வேலி அல்வா வாங்குறியளா? என்ன பராக்கு பாத்துட்டே நிக்கிய?" என வியாபாரியின் குரல் பலமாக ஒலிக்க  ஆரம்பித்தது. அவர் கடையை விட்டு நகர துவங்கினேன். " ஏல என்ன நான் கூப்டுதேன்லா? அந்த சுரேஷ் பய கடைல எல்லாம் உழுத்து போனது தான் இருக்கு, பாத்துகிடுங்க!" என அவர் தொழிலில் வன்முறையை சிறிது இழையோட விட்டார் இன்னும் அழுத்தமாக. அவர் சொன்ன சுரேஷ் அண்ணாச்சியின் கடையில் எனது பார்வையை ஓட விட்டேன். பளபளப்பாகவே இருந்தன அனைத்து பலகாரங்களும்.
ஆயினும் பக்கத்து கடைக்காரர் விடுவதாக இல்லை. "மின்னுவதெல்லாம் பொன்னல்ல! பாத்துகிடுங்க" என்றார். அவருக்கு செவி சாய்க்காமல் சில பொரி உருண்டைகளை வாங்கி எனது பையில் வைத்த போது சிறிது புன்னகைத்தேன் யாருக்கும் தெரியாமல். பொரி உருண்டைகள் உருவத்தில் பெரியதாக இருப்பதால் எனது பையும் வழக்கத்தை விட பூரிப்பாகவே  இருந்தன. அங்கிருந்து நகர்ந்து களக்காடு செல்லும் பேருந்தில் அமர்ந்தேன். 

பேருந்தில் என்னை தவிர ஒன்றிரண்டு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். நகரத்தை தாண்டி சிறிது நேரத்திலேயே திருநெல்வேலிக்கே உரிய விதத்தில் கிராமங்களில் பேருந்து பயணப்பட துவங்கியது. மலையோரமாக இருந்ததால் இதமான சாரலுடன்  காற்று வீசியது. மழைகாலம் என்பதால் குளங்களும் குட்டைகளும் நீரால் நிரம்பி இருந்தது. பயண அசதியில் இருந்ததால் நடத்துனரிடம் பயணசீட்டு  பெற்ற உடனேயே தூங்க ஆரம்பித்து விட்டேன் கடைசி நிறுத்தம் கார்த்தியின் ஊர் என்பதால். சற்று கண்ணயர்ந்ததும் நானும் கார்த்தியும் ஈரோட்டில் பழகிய நாட்கள் என் மனதில் இழையோடின. அவனுக்கு ஒரு மஞ்சள் மண்டியில் கணக்கெழுதும் வேலை. எனக்கோ ஒரு கரும்புச்சாறு கடையில் கரும்பு அரைக்கும்  பணி. தினமும் பணி முடித்து மாலை வேளையில் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி செய்வது எங்கள் வழக்கம். அவனுக்கு பெரிய விளையாட்டுவீரனாக வேண்டும் என்ற அவா. ஆனால் பொருளாதார நிலையில் அவனால் விளையாட்டுக்கு தேவையான காலணிகள் வாங்க இயலவில்லை. எனவே அந்த ஆசையை ஓரங்கட்டிவிட்டு உடல்நலனை பராமரித்தாலே போதுமானதென்று முடிவெடுத்து தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிகொண்டான். அந்த விளையாட்டு மைதானத்தில் தான் எங்கள் நட்பு துவங்கியது. அதன்பின் அடிக்கடி நான் வேலை செய்யும் கரும்புச்சாறு கடைக்கு  வருவான். நண்பன் என்பதால் முதலாளிக்கு தெரியாமல் அவனுக்கு இலவசமாகவே கரும்புச்சாறுகளை வழங்கி வந்தேன். அவ்வப்போது திரைப்படங்களுக்கு செல்வதும் எங்கள் வார இறுதி நாட்களை இனிமையாக்கி வந்திருக்கின்றன. 

திரைப்படங்களுக்கு செல்ல காசில்லாத நாட்களில் காவிரி ஆற்றின் கரைக்கு சென்று ஊர் கதைகள் பேசுவோம். விவசாயத்தின் மேல் அவனுக்கு நாட்டம் இருந்தது. ஆனால் விவசாயம் இப்போது நல்ல நிலைமையில் இல்லை  என்று அலுத்துக்கொள்வான். இன்னும் கொஞ்ச நாட்களில் விவசாயம் அழியப்போகிறது நமது நாட்டில் என்றும், அதற்கான விளக்கமும் தருவான். "எனது பாட்டனார் காலத்திலிருந்து அனைவரும் விவசாயம் தான் செய்கின்றனர். ஆனால் எனது தலைமுறை விவசாயத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. விவசாயகுடும்பத்தில் பிறந்த நான் இன்று விவசாயம் செய்யாமல் கணக்கெழுதுகிறேன். என்னைப்போல எனது ஊரில் அனைவரும் நகரத்தை நோக்கி புறப்பட்டு விட்டனர். இனிமேல் எப்படி தான் விவசாயம் செழிக்க போகிறதோ?" என்று அடிக்கடி அவன் விவசாயத்தின் மேல் இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்துவான். அவன் சொல்லுவதை ஆமோதிப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை. ஏனென்றால் விவசாய குடும்பத்தில் பிறந்து நானும் நகரத்துக்கு வந்து வேறு வேலை செய்வதால்.

திடீரென்று ஒரு நாள் இரவு அவன் ஊரிலிருந்து அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரவே சொல்லாமல் கொள்ளாமல் அன்றே இரவோடு இரவாக புறப்பட்டு சென்றுவிட்டான். மறுநாள் அவன் அறையில் வசிக்கும் சக அறைவாசியிடம் விசாரித்தபோதுதான் சொன்னார் கார்த்தி கிளம்பிவிட்டதை. வயதான தாய், தந்தை, ஒரு விதவை அக்காவும் சில குழந்தைகளும் இருப்பதாக சொல்லி இருக்கிறான். அவர்களில் யாருக்கோ தான் என்னமோ ஆகிவிட்டதோ என்று மனதில் நினைத்துகொண்டேன். மனதில் நெருடலாக இருந்தது இவ்வளவு நாள் பழகியும் சொல்லாமல் சென்றுவிட்டானே என்று. வழக்கம்போல கரும்பு அரைக்கும் பணியில் மூழ்கிவிட்டேன். அரவை இயந்திரத்தின் வேகத்தைபோலவே வருடங்களும் வேகமாக ஓடிற்று. அதன்பின் நான் அந்த கரும்புச்சாறு கடையில் பணியிலிருந்து நின்றுவிட்டு, ஒரு உள்ளூர் தொலைகாட்சி நிலையத்தில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தேன். விளம்பரங்கள் சரிவர கிடைக்காத காரணத்தால் அங்கு ஆட்குறைப்பு செய்யவேண்டும் என்று அதன் முதலாளி உத்தரவிட எனது மேலதிகாரி என்போன்ற இன்னும் ஒன்றிரண்டு பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டார்.
அறையில் வந்து இனி என்ன செய்வதென்று யோசனையில் இருக்கையில் பழைய டயரியில் இருக்கும் முகவரிகளை புரட்டினேன். கண்ணில்  கார்த்தியின் முகவரியை பட்டது.  அவன் ஊருக்கு சென்று அவனைப்பார்த்து விட்டு வரலாம் என்று தோன்றியது. யோசனையினூடே ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் கண்ணயர்ந்து விட்டேன். பக்கத்து வீட்டு சாந்தி அக்கா  வாசலில் கோலமிட தண்ணீர்  தெளித்து கொண்டிருந்தாள். அதில் ஒரு துளி என் முகத்தில் விழ முகத்தை துடைத்தேன். பேருந்தின் ஜன்னல் வழியே மழை நீர் எனது முகத்தை நனைத்தது.  சாரல் மழை இன்னும் வேகமேடுத்திருந்தது. கார்த்தியின் ஊரை நெருங்கி விட்டதை பேருந்தின் நடத்துனர் உரத்தகுரலில் சொன்னார் "இதுதான் கடைசி நிறுத்தம் எல்லாரும் இறங்குங்க" என்று. பேருந்திலிருந்து இறங்கி அருகிலிருந்த  கடையில் தேநீர் வாங்கி அருந்தி விட்டு கார்த்தியின் முகவரியை காண்பித்து விசாரித்தேன். அங்கு தேநீர் அருந்திக்கொண்டிருந்த அனைவரும் என்னை பார்த்து முறைத்துகொண்டே வழி சொல்லாமல் சென்று விட்டனர். கடைக்காரரிடம் காசு கொடுத்துவிட்டு மீண்டும் நடக்க துவங்கினேன்.

பள்ளி சென்று திரும்பிய மாணவர்கள் எதிரில் பட்டனர்.அவர்களிடம் முகவரியை காண்பித்து வழி கேட்டேன். அதில் ஒரு பொடியன் " அண்ணாச்சி எனக்கு இந்த ஊருதான், வாங்க வழி சொல்லுதேன்" என்றான். போகும் வழியில் அவன் ஊரிலுள்ள இடங்களை பற்றி சொல்லிக்கொண்டே வந்தான். "இதுதான் எங்க ஊர் பண்ணையாரின் வீடு, எவ்ளோ பெருசா இருக்கு பாத்தியளா அண்ணாச்சி?" என்றான். அந்த வீட்டை தாண்டி ஒரு அக்ரகாரம் மிக அழகான வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருந்தது. "இங்க தான் எங்க ஊர் கோவில் ஐயனுங்க வீடு இருக்குது, நீங்க கோவிலுக்கெல்லாம் போவியளா? உங்களை பார்த்தால் கிறிஸ்தவரை போல இருக்கே? நானும் கிறிஸ்தவன்தான் நான் இந்த அக்ரகாரத்து கோவிலுக்கெல்லாம் போவேன்" என்றான். எம்மதமும் சம்மதம் உணர்வாளன் போல என நினைத்தேன். "இந்த கோவில்ல புளியோதரை ரொம்ப நல்லா இருக்கும், சாப்பிட்டு பாருங்க, அப்புறவு தினமும் இங்க வருவிய" என்றான். அப்போதுதான் விளங்கியது  அவனுடைய எம்மத சம்மத உணர்வு. "தோ தெரியுது பாத்தியளா? அதான் நீங்க விசாரிச்சு வந்த முகவரி, சூதுவாதா போயிட்டு வாங்க" என்றான், புரியாமல் தலையசைத்துவிட்டு அவன் காண்பித்த வீட்டை நோக்கி நடந்தேன். 

மலையடிவாரத்தில் சுற்றிலும் வயல்வெளி நடுவில் பனைமரங்களும் பாக்குமரங்களும் சூழ்ந்திருந்தது அந்த குடிசை. சில வாழை மரங்கள் குலை தள்ளியும் அறுவடை செய்யாமல் நின்று கொண்டிருந்தன. இயற்கையை ரசித்து கொண்டே குடிசையை நெருங்கினேன். வீட்டில் ஆள் அரவம் இல்லாமல் இருந்தது. விவசாய வேலைகளுக்கு சென்றிருப்பார்கள் என நினைத்தேன். அங்கே இருந்த சுமைதாங்கியில் பையை வைத்துவிட்டு அதன் அருகில் அமர்ந்தேன். சற்று நேரம் சென்று ஒரு நடுத்தர வயதையொட்டிய ஒருவர் அழுக்கு உடை, வெகுநாள் தாடியுடன் நான் அமர்ந்திருப்பதைகூட கவனிக்காமல் என்னை கடந்து சென்றார் வீட்டினுள்ளிலிருந்து. நான் பலமாக குரல் கொடுத்தும் என்னை சீண்டாமல் சென்றுவிட்டார். அதன் பின் வெகுநேரம் அங்கு அமர்ந்திருந்தும்  வீட்டிலோ வீட்டை சுற்றியோ யாரும் தென்படாததால் வாங்கி வந்த பொரி உருண்டைகளையும்,  எனது தொடர்பு விவரங்களையும் ஒரு காகிதத்தில் எழுதி அங்கு வைத்து விட்டு புறப்பட்டேன் கனத்த இதயத்துடன்.

மீண்டும் அந்த தேநீர் கடையின் அருகில் வந்து  அடுத்த பேருந்து எப்போது என்று விசாரித்தேன். " பேருந்து எல்லாம் போய்டுச்சு பாத்துகிடுங்க, இனிமேட்டு காலைல தான் அடுத்து வரும்" என்றார். என்ன செய்வது என யோசிக்கையில் அவரே தொடர்ந்தார், "இந்த கடை ஓரமா படுத்துகிடுங்க காலைல தான் இனிமேட்டு வண்டி வரும், எதாச்சும் சாப்டியளா?" என்றார்.கார்த்தியின் ஞாபகமாகவே இருந்ததால் உணவை பற்றி யோசிக்கவில்லை. "அந்த கிறுக்கு பயல பாக்க எதுக்கு போனிய? உங்களுக்கு  உடமைகாரங்களா?" என்றார். கார்த்திய கிறுக்கு பயனு சொல்றாரே என்று கோபம் கொள்வதற்குள் மீண்டும் அவரே தொடர்ந்தார். "அந்த பயலோட அப்பனும் ஆத்தாளும் ஊருல நிறைய பேரு கிட்ட கடனை வாங்கி விவசாயம் பண்ணிட்டு இருந்தாவ தம்பி, ஒரு ஆடி மாசம் பெய்ஞ்ச பேய் மழைல பயிர் அம்புட்டும் நாசமாயிடுச்சுன்னுட்டு அந்த பயலோட அப்பனும் ஆத்தாளும் அக்கா பிள்ளையளும் விஷத்த குடிச்சிட்டு போய் சேந்திச்சுங்க,  இந்த பய அப்புறமேட்டு வந்தான், அவங்களை எல்லாரையும் அடக்கம் பண்ணிட்டு நாங்க பைசாவ கேக்க ஆரம்பிச்சதுலேருந்து கிறுக்கு பய மாதிரி நடிச்சிட்டு  திரியிறான். அவன் அப்பன் காப்பி தண்ணி குடிச்சதுல எனக்கு எண்பத்தியேழு ரூபா அம்பது பைசா பாக்கி தம்பி, உங்களுக்கு ஏதாச்சும் தரணுமா அந்த பய?" என்றார். 

இடி இடித்து பேய் காற்றுடன் பெரு மழை பெய்ய துவங்கியது. அதில் ஒரு இடி அருகிலிருந்த பனைமரத்தின் மேல் விழுந்தது. அந்த இடி எனது இதயத்தில் இறங்கியதைப்போல  இருந்தது தேநீர் கடைக்காரர் சொன்ன கார்த்தியை பற்றி சொன்ன தகவல். ஆற்றொணா துயரத்துடன் அங்கிருந்து கிளம்பினேன் கார்த்தியின் வீட்டை நோக்கி. "ஏல இங்க படுத்திட்டு காலைல போலாம் லா?" என்றார். அவர் குரலை சட்டை செய்யாமல் புறப்பட்டேன். மழை நீர் எனது உடையை நனைத்து ஈரமாக்கி இருந்தது. கார்த்தியின் வீட்டை நெருங்கினேன். எனது முகவரி எழுதி வைத்திருந்த காகிதம் மழை நீர் பட்டு கிழிந்து போய் இருந்தது எனது இதயத்தை போல. வெகு தொலைவில் ஒரு நாய் குரைத்து கொண்டிருந்தது. "அந்த கிறுக்கு பய வரான்னு நெனைக்கேன்" என்றார் பக்கத்து வீட்டு கிழவி...! எனது நண்பனின் வருகைக்காக காத்திருந்தேன் கடைக்காரர் சொன்னது போல கார்த்தி கிறுக்கன் போல நடிக்கிறான் என்ற நம்பிக்கையில். தூரத்தில் கேட்ட நாயின் குரல் இப்போது அருகில் கேட்க துவங்கியது...!

Friday, July 13, 2012

சட்டை செய்யாத சேட்டை காலம்...! (Carefree Childhood Days...!)





பள்ளி செல்லும் நாட்களில், காலை நேரம் விடிந்ததும் எமனோட ஏஜண்டை லாரி ரூபத்தில் பார்க்கும்போது  பயப்படும் தவளையை போல தினம் காலையில் எனது தந்தையார் என்னை வந்து உறக்கம் கலைக்கும்போது பயந்து கொண்டே எழுந்து காலைக்கடன்களை நிறைவேற்றுவேன். பிறகு  குளித்து முடித்து அம்மையார் தரும் காலை டிபனை வயிற்றினுள் திணித்து விட்டு புறப்படும்போது கடைசியாக ஓன்று நடக்கும், ஆம் `பவுடர்`!  மகன் கருப்பாக இருப்பதால் கோபம் கொள்ளும் அம்மா கோபத்தை பவுடர் மேல் காண்பித்து, பவுடரை கறுப்பாக்கும் வேலையில் இறங்குவார். அப்போது பவுடரை கண்டுபிடித்தவருக்கு மனதில் மன்னிப்பு கேட்டுகொள்வேன்!. அதன் பிறகு புத்தகப்பையை(இன்றைய பள்ளி குழந்தைகளைபோல இல்லை. அதிகம் உணவு கொஞ்சம் புத்தகம்!!!) எடுத்துகொண்டு  புறப்படுவோம். 

எங்கள் ஊருக்கு வருவது ஒரேயொரு பஸ் மட்டுமே. அதில் ஏற முயற்சிப்போம் நானும் எனது நட்பு வால்களும். ஆனால் அந்த பஸ்ஸில் ஏறுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஆயக்கலைகள் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். குங்பூ, கராத்தே, குத்துச்சண்டை, மல்யுத்தம் இன்னும் கொஞ்சம் கெட்ட கெட்ட வார்த்தைகள் தெரிந்திருந்தால் மட்டுமே அந்த வண்டியில் ஏற முடியும். அப்படியும் ஏற முடியாது. ஏனென்றால் என் வயதையொட்டிய அனைத்து மாணவர்களும் ஆஜானபாகு உடல்பலம் மிக்கவர்கள். நானோ சுண்டெலி! நடுவில் நுழைந்து விடலாம் தான், ஆனால் உயிருக்கு இத்த்ரவாதம் கிடையாது. அதையும் மீறி உள்ளே செல்லலாம் என்றால் உள்ளே ஆக்சிஜன் குறைபாடு உள்ள பிரதேசம் போல இருக்கும் அந்த பஸ்சின் உள்பாகம். நம்மூரில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதி இல்லாத காரணத்தால் அந்த பஸ்ஸை வெகு நாட்கள் வெளியிலிருந்து பார்ப்பது மட்டுமே சாத்தியம்.

ஆகவே பெரும்பாலான நாட்கள் வயல்வெளியில் நடந்தே செல்வது வழக்கம். வயல்வெளி எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை. அந்த வயல்வெளியில் நடந்து செல்வது பல உணர்வுகளை எங்களுக்கு அளித்ததுண்டு. ஆம் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிக்கு கடும்போட்டி அளித்திருக்கிறோம் எங்கள் காகித கப்பல் மூலமாக. போகும் வழியில் நெல்கதிர், வாழைப்பழம், கிழங்கு வகைகள், வெள்ளரி பிஞ்சு இவை அனைத்தும் கிடைக்கும் இலவசமாக. ஆனால் ஒரு திறமை கண்டிப்பாக இருக்க வேண்டும், வயலின் உடைமையாளர் வரும்போது கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடுவது தான் அந்த திறமை. 

அவ்வாறாக தினமும் ஓட்டமும், வீர(!) நடையுமாக வயல்வெளியில் செல்லும் நாட்களில் ஒரு நாள் எனது நண்பனின் ஒரு ஐடியா, மறுநாள்  பள்ளியை மட்டம் போடுவது என்று, நான்கு நண்பர்கள் முடிவெடுத்தோம் முதன்முறையாக. காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போது அம்மாவிடமிருந்து பவுடரை காப்பாற்றி(!) விட்டு வேக வேகமாக பள்ளிக்கு (!)புறப்பட்டோம். மாஸ்டர் பிளான் ரெடி செய்தோம். கிழங்கு அவித்து, மீன் பிடித்து சுட்டு சாப்பிடுவது என்று. வீட்டிலிருந்து கிளம்பும்போதே எடுத்து வைத்திருந்த கலர் சட்டையும் கலர் பேண்டும் வயலிலேயே மாற்றிவிட்டு குளக்கரைக்கு சென்றோம்.ஏனெனில் எங்கள் ஊர் பெருசுகள் பள்ளி சீருடையில் இருந்தால் கண்டுபிடித்து வீட்டில் சொல்லி விடுவார்கள். எங்கள் ஊரில் எங்கு பார்த்தாலும் குளமும் ஓடையும் ஆறுமாக இருப்பதால் மீன் கிடைப்பது சிரமமான காரியமல்ல. துணியை கழற்றி குளக்கரையில் வைத்து விட்டு எனது தந்தையாரின் வேட்டியை உபயோகித்து மீன் பிடிக்க ஆரம்பித்தோம். சில நிமிடங்களிலேயே எங்களுக்கு தேவையான மீன்கள் கிடைத்து விட்டன. 

அடுத்ததாக கிழங்கு புடுங்க வேண்டும். இந்த மாதிரியான விஷயங்களுக்கு நான்தான் லாயக்கு என்று எனது நண்பர்கள் முடிவெடுத்து விடுவார்கள். காரணம் சேட்டையை ஆரம்பித்து வைத்து அதிகம் மாட்டிக்கொள்வது நானல்லவா? அதுபோல அன்றும் நான் தான் கிழங்கு பிடுங்க ஒரு வயலுக்குள் நுழைந்து கிழங்கு பிடுங்கி ஓட்டபந்தய வீரனுக்கு நிகராக ஓடிவந்து பக்கத்து ரப்பர் தோட்டத்து பாறைகளுக்கிடையில் புகுந்து கொண்டோம். அங்கே மூன்று கற்களை அடுக்கி ஆதிமனிதன் டெக்னாலஜியை அரங்கேற்றினோம். கிழங்கு மற்றும் மீனை வேக வைத்து சாப்பிட துவங்கினோம்.அவ்வேளையில் அங்கு ஒருவர் சென்றுகொண்டிருந்தார். நான் அவரை சாப்பிட அழைத்தேன், நாம் தான் அன்னத்தை பிட்டுவாழும் தமிழர்களாச்சே? 

அவரும் வந்து வயிறார உண்டுவிட்டு "பசி மயக்கத்தில இருந்தேன், நல்லவேளை நீங்கள் அழைத்து உணவு கொடுத்தீர்கள், மிக்க நன்றி" என்றார். "பரவாயில்லீங்க" என்றோம் ஒத்தகுரலில். "நன்றி தம்பி நான் கிளம்புறேன், ஆமா கிழங்கு எங்க வாங்கினீங்க? நல்ல ருசியாக உள்ளது" என கேட்க, நான் முந்திரிக்கொட்டையாக "எவனோ எலியாஸ் கு சொந்தமான தோட்டமாம், அந்த ஆள் தோட்டத்தில் தான் பிடுங்கினோம்" என்று சொல்லி மீண்டும் மீன் முள்ளின் மேல் கவனம் செலுத்தினேன். 

சொல்லி முடித்ததும் என்னை பிடரியில் பிடித்து கொத்தாக தூக்கி முதுகில் ஒரு அப்பு அப்பினார்  . "அடப்பாவி மக்கா எங்களிடமே வாங்கி தின்று விட்டு என்னையே அடிக்கிறாயே?" என்று ஆத்திரமுற்றபோது  தான் அவர் சொன்னார் "எனது தோட்டத்தில் திருட்டுத்தனமாக பிடுங்கிய கிழங்கை எனக்கே சமைத்து குடுக்குறாயா?" என்று. அப்போதுதான் தெரிந்தது அந்த `எலியாஸ்` அவர்தான் என்பது. குருவி கூட்டத்தில் கல் எறிந்தால் குருவிகள் சிட்டாக பறப்பதை போல கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் நண்பர்கள் என்னை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் சூப்பர்சானிக் வேகத்தில்...! என்னை தரதரவென்று இழுத்துக்கொண்டு எனது பெற்றோரின்  முன்னால் என்னைக்கொண்டு வந்து  நிறுத்தினார் நீதிகேட்க, மனுநீதி சோழன் முன்பு சென்று முறையிட்ட பசுவைப்போல. எனது தந்தையிடம் தேர் இல்லாத காரணத்தால் உழவுக்கு பயன்படுத்தும் ஏர் பிரம்பால் பின்னி எடுத்து விட்டார். அன்றுமுதல் பைபிளில் கூட எலியாஸ் பற்றிய கதைகள் படிப்பதை நிறுத்திவிட்டேன்.

அதன்பின் வயல்வெளி யாத்திரைகளை குறைத்துக்கொண்டு நீர் மார்க்கமாக செல்லலாம் என்று முடிவெடுத்து எங்கள் ஊரில் விவசாயத்திற்காக பயன்படும் கால்வாயை தேர்ந்தெடுத்தேன். பேச்சிப்பாறை அணையிலிருந்து எங்கள் ஊரை கடந்து செல்லும் அந்த கால்வாயில் தான் எனது புனித பயணம்(!) துவங்கியது. தினம் மாலை வேளையில் பள்ளி முடிந்ததும் செருப்பாலூர் என்ற ஊரிலிருந்து நீர் வழி பயணம் துவங்கும். பள்ளியிலிருந்து வீட்டுக்கு குறுக்கு வழியில் வரும் தொலைவைவிட இருமடங்கு அதிகம் செருப்பாலூருக்கு செல்லும் தூரம். பள்ளியிலிருந்து செருப்பாலூரை கடந்து செல்லும் ஏதாவது பஸ்சின் பின்புறத்தில் இருக்கும் ஏணியில் பிடித்து தொங்கி கொண்டே சென்று செருப்பாலூரை அடைந்து அதன்பின் நீர் வழி பயணம் துவங்கும். 

கால்வாய் ஓரத்தில் சென்று சட்டை, கால்சட்டை, பாதணி இவற்றை புத்தகப்பையில் திணித்து விட்டு, அங்கேயே வாழை மரத்தை தேடி கண்டுபிடித்து அதனை கட்டுமரமாக்கி அதன் மேல் புத்தகப்பையை வைத்துவிட்டு நீர்வழி பயணம் துவங்கும். எங்கள் ஊர் சக நண்பர்களும், பெண்களும் என்னை வித்தியாசமாக பார்த்துகொண்டே நடையை கட்டுவார்கள். அதில் ஒரு பெண் "உன்னையெல்லாம் பெத்தாங்களா செஞ்சாங்களாடா? திருந்தவே மாட்டியாடா?" என்று கேட்டதும் உண்டு. சில நாட்கள் அவள் என்னைபார்த்து முறைப்பதும் அதன் பின் நான் திருந்த வாய்ப்பே என்று நினைத்து அவள் நடையை கட்டி விடுவாள். 

பின்னொருநாள் மாலை நேரம் என்னிடம் வந்து "என்னால் எனது புத்தகப்பையை தூக்க முடியவில்லை, எனது பையையும் அந்த வாழை மரத்தின்மேல் வைத்து கொண்டு வந்து தருகிறாயா?" என்று கேட்டாள். இதற்க்காகத்தானே காத்திருந்தாய் பாலகோபாலா? என்று மனதில் நினைத்து எனது கட்டுமரம் நீரில் தலை அசைத்தது. ஆயினும் அவள் மீது மிக்க கோபத்தில் இருந்ததால் இவளுக்கு நாம் யார் என்று காட்டி விட வேண்டும் என நினைத்து "சரி" என்றேன். 
அவளுடைய பையையும் எனது பையின் அருகில் வைத்துகொண்டு குற்றாலீசுவரன் ஆங்கில கால்வாயை கடந்ததைப்போல கால்வாயில் நீந்த துவங்கினேன்.

சிறிது நேரத்தில் அவள் ஊர் வந்துவிட்டது, அவள் பையை கேட்க துவங்கினாள். ஆனால் நான் ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பல் குர்ஸ்கை போல மூழ்கியவாறே நீந்த துவங்கினேன். அவள் கத்திக்கொண்டே இருந்தாள். ஆயினும் செவி சாய்க்காமல் நீந்த துவங்கினேன். அவள் தொண்டை தண்ணி வற்றும் நேரம் வரும்போது அவள் ஊரை தாண்டி வெகு தூரம் வந்து விட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் என் ஊரும் வந்து விட்டது. எனது புத்தகப்பையை எடுத்துக்கொண்டு கரைக்கு வந்துவிட்டேன். அந்நேரத்தில் அவள் அழுது அழுது கன்னம், வெற்றிலை போடும் என் அப்பத்தாவின் நாக்கைபோல சிவந்திருந்தது. எனினும் அவளுக்கு புத்தகப்பையை எடுத்து தராமல் கரையேறி ஓடிவிட்டேன் . அடுத்த அரைமணி நேரத்தில் அவளும் அவள் தந்தையும் எனது வீட்டு காலிங் பெல்லை அழுத்தினார்கள் மனுநீதிச்சொழனின் நீதிமணியின் நினைப்பில். மறுபடியும் மனுநீதிச்சோழன் வீட்டிலிருந்து வெளியே வந்தார் பிரம்புடன், பிரம்பை பார்த்த நான் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிக்கொண்டிருந்தேன் வெகு தூரத்தில்...!  

சேட்டை தொடரும்...!


Thursday, July 12, 2012

First Dating Experience...!



திருவல்லிக்கேணி விடுதிகளில் தங்கி இருந்த காலகட்டத்தில்  கஷ்டம் மட்டுமே கடமையாகஅழையா விருந்தாளியாக வந்து குடியமர்ந்த தினங்களில்,   மாலை வேளையில் மெரினா கடற்கரை செல்வது மட்டுமே என் போன்ற நண்பர்களுக்கு ஒரு ஆறுதலாய் இருக்கும்ஆகவே தினமும் மாலை நேரம் ஆனதும் கடற்கரை செல்வது அனைத்து நண்பர்களுக்கும் கிட்டத்தட்ட மியாமி கடற்கரை செல்லும் சுகத்தை தரும் உணர்வுஆகவே கடமையே கண்ணாக தினமும் மாலை வேளைகளில் மெரினா கடற்கரை எங்களை ஈர்த்துகொள்ளும்அப்படி தினமும் சென்று அமர்ந்திருக்கும்போது கடற்கரை தரும் இதமான காற்றுமணல்வெளிஅலையின் ஆக்ரோஷம்குழந்தைகளின் விளையாட்டுகள்ராட்டின வியாபாரியின் குரல்சுண்டல் சிறுவனின் அழைப்புசுக்கு காப்பி இளைஞனின் கூவல் இவை அனைத்தையும் விட அதிகமாக ஈர்க்கும் ஒரு விஷயம் அந்த மெரினாவுக்கே உரிய குணத்தில் அங்கு உண்டு

ஆம் "காதலர்கள்இதுதான் அந்த வயதில் அதிகம் குறுகுறுப்பான உணர்வு அந்த மெரினாவில். :)
தினம் மாலை வேளையில் அங்கு செல்லும்போதும் ஏதாவது காதலர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே இளைப்பாறிவிட்டு (மலையை சாய்க்கிற வேலை செய்து விட்டு வந்தமர்ந்ததில்லைவழக்கம்போல வேலையில்லாமல் வெட்டியாக மேன்ஷனில் இருந்துவிட்டுமீண்டும் மேன்ஷனுக்கு திரும்பி செல்லும்போதும் மனது இரவு முழுவதும் குறுகுறுக்கும்மறுநாளும் வேலை (!) முடித்துக்கொண்டு மீண்டும் இளைப்பாற(!) செல்லும்போதும் வழக்கம் போல காதலர்கள் வரவேற்ப்பார்கள்(என்னை அல்லஎனது வயிற்றெரிச்சலை). 

இவ்வாறாக காலம் நகர்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில் வழக்கமாக இளைஞர்களுக்கு வரும் மிஸ்டுகால்  எனக்கும் ஒருநாள் எனது  அலைபேசியில் வந்ததுஅந்த எண்ணை மீண்டும் தொடர்புகொண்டபோது "சாரிங்க என் அண்ணனுக்கு கால் பண்ணினேன்தவறாக உங்களுக்கு வந்து விட்டதுஎன்று கூறி தொடர்பு துண்டிக்கப்பட்டதுதுண்டிக்கப்பட்டது எனது போன் தொடர்பு மட்டுமல்ல எனது இரவு தூக்கமும் தான்தினமும் இரவு வேளைகளில் அந்த எண்ணை தொடர்பு கொள்ளலாமா வேண்டாமா என்று நினைத்து நினைத்தே தூக்கம் என்னை விட்டு மிக நீண்ட தூரம் சென்று விட்டதை எனது கண்ணின் கீழ் இருந்த `கருவிழிசில வாரங்களுக்கு பின் உணர்த்தியது நிலைக்கண்ணாடியின் வடிவில்

பின் ஒருநாள் தைரியத்தை வரவழைத்து கொண்டு அந்த எண்ணை தொடர்புகொண்டேன். "மச்சான் எப்படிடா  இருக்க?
போன் பண்றதேயில்லைவேலைக்கெல்லாம் ஒழுங்கா போறியா?" என்று மூச்சு விடாமல் ஒப்பித்ததும் மறுமுனையில் இருந்து அவளின் அம்மாவின் குரல், "யாருப்பா நீஎன் பொண்ணுக்கு அடிக்கடி தொந்தரவு குடுக்குறதுபோலீஸ்ல புகார் செய்கிறேன்என்று குரல் இடியாய் இறங்கியதுஅப்போதுதான் உறைத்தது `கருவிழியை தேவையில்லாமல் வரவழைத்து விட்டோமோஎன்றுபின்னொருநாள் மாலை நேரம் மீண்டும் அதே எண்ணிலிருந்து மறுபடியும் மிஸ்டு கால் வந்தபோது புறக்கணித்து விட்டேன் திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் கருப்பசாமியின் அடியையும் , உதையையும் நினைவில் கொண்டு

மறுநாள் மீண்டும் அழைப்பு வந்தபோது, `நாம்தான் தொந்தரவு செய்யவில்லையேஎன்ற எண்ணத்தில் " ஹலோ யாருங்கஎதுக்குங்க தொந்தரவு பண்றீங்கநான் தான் உங்களுக்கு தொந்தரவு குடுக்கலியே அப்புறம் ஏன் நீங்க என்னை மிரட்டுறீங்கஎங்களுக்கும் ஆள் இருக்காங்கஎங்களாலும் போலீஸ் ஸ்டேஷன் போக முடியும்என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்த பிறகு சில மணித்துளிகள் மவுனமாக இருந்த மறுமுனை மவுனம் கலைத்து திருவாய் மலர்ந்தது. "மன்னிச்சுக்கோங்க சார்ஒரு எண் குழப்பத்தால் தான் உங்கள் எண்ணிற்கு அடிக்கடி அழைப்பு வந்து விடுகிறதுஎன்றாள் அவள்அப்போதுதான் நிம்மதியே வந்தது. "பரவாயில்லீங்கஎன்றது எனது முனை மிக்க நிம்மதியுடன்

பிறகு அடிக்கடி அழைப்புகளும் விசாரிப்புகளுமாக காலம் நகர்ந்துகொண்டிருந்த வேளையில் ஒருநாள் "சந்திக்கலாமா?" என்ற கேள்வியும் வந்தது. "இப்போ கொஞ்சம் வேலை அதிகம்(!), இன்னும் கொஞ்ச நாள் கழித்து பார்க்கலாமே!" என்றேன் எனது பாக்கெட்டின் நிலையை கவனத்தில் கொண்டுஅதன்பிறகு அடிக்கடி அழைப்பு வந்துகொண்டே இருந்தது சந்திக்கலாம்சந்திக்கலாம் என்று.  வெகு நாள் கடத்திய பிறகு ஒருநாள் ஒத்துக்கொண்டேன் பாக்கெட்டை சிறிது கனமாக்கிய நம்பிக்கையில்மறுநாள் காலையில் தி.நகரில் சந்திப்பது என்று முடிவாகிவிட்டதுஅப்போதுதான் மனது அடித்துகொண்டது ஒரு முக்கியமானவர் இருந்தால் மட்டுமே இந்த சந்திப்பை இனிமையாக்க முடியும் என்றுஆம் அவர்தான் "பைக்``. என்னிடம் `அவர்இருந்ததில்லை அந்த காலகட்டத்தில்ஆகவே எனது நண்பனின் உதவியை நாடினேன்அவனும் வள்ளலாக சரி என்று சொல்லிவிட்டான்அப்போது புரியவில்லை அவன் சொன்னது `சரிஅல்ல `ஆப்புஎன்று

மறுநாள் காலையில் நன்கு குளித்துவிட்டுபக்கத்து அறை சாப்ட்வேர் நண்பனிடம் வாசனை திரவியம் வாங்கி பூசிக்கொண்டு ஓசி பைக்கில் அமர்ந்து எல்ஐசி கட்டிடத்தை கடக்கும்போதுதான் உற்சாகமாக இருந்ததுபல சிக்னல்கள்மற்றும் சிக்கல்கள் கடந்து தி.நகரை அடைந்து விட்டாகி விட்டதுஅங்கு சென்று அவளை கண்டுபிடித்து விடலாம் என்றாள் போனில் காசு இல்லைஒருவழியாக பல வேளைகளில்  இளைஞர்களை காப்பாற்றும்  மஞ்சள் பெட்டியை கண்டுபிடித்து ஒரு ரூபாய் நாணயத்தை அதனுள் நுழைத்து ரிசீவரை காதில் திணித்து நின்றபோது அழகான குரலில் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் சினுங்கினாள் "நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தற்சமயம் உபயோகத்தில் இருப்பதால் சிறிது நேரத்திற்கு பின் முயற்சிக்கவும்யார் யாரை உபயோகிக்கிறார்கள் என்று  தெரியாமல் குழப்பத்திலேயே மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய துவங்கினேன் கஜினி முகம்மதை போலகடைசியில் செல்போன் தேவதை கண் திறந்தாள்ஆம் வழக்கம்போல "அப்பா கிட்ட பேசிட்டு இருந்தேன்எங்க இருக்கீங்கஎன்றாள்ஒரு கடையின் பெயரை சொல்லி நான் அணிந்துள்ள உடைசெருப்பு மற்றும் இன்ன பல இத்யாதிகளையும் சொல்லி முடிக்கும் போது தான் கவனித்தேன் எனக்கு பின்னால் என்னை போல பாதிக்கப்பட்ட இன்னும் பல வருங்கால இந்திய தூண்கள் நிற்பதை

பஸ்ஸில் வந்திறங்கிய அவள் சீக்கிரமே என்னை கண்டுபிடித்து விட்டாள்அப்போதுதான் உறைத்தது அனுபவசாலிகள்(!)திறமைசாலிகளை விட மேலானவர்கள் என்றுஅப்போது சொன்னாள் "இங்கிருந்து சீக்கிரம் சென்று விடலாம்அப்பாவிற்கு தெரிந்த பலர் இங்கு உள்ளனர்அவர்கள் பார்த்துவிட்டால் பிரச்னை ஆகி விடும்நானும் பைக்கை உதைத்து அவளை பின் இருக்கையில் அமர்த்தி சிறிது தூரம்தான் சென்றிருப்பேன் அதற்குள் பைக் திடீரென நடு ரோட்டில் நின்றுவிட்டதுஅவளை இறங்கசொல்லி விட்டு பைக்கை ஓரமாக நிறுத்தி உதைக்க ஆரம்பித்தேன்மழை பெய்த சந்தோஷத்தில் பூமித்தாய் குளிர்ந்தாள்அவ்வளவு வியர்வை என் உடலிலிருந்து பூமியை நனைத்திருந்ததுஅந்த நேரத்தில் அவள் என்னிடம் வந்து " என் வீட்ல தேடுவாங்க நான் கிளம்புறேன்" என்று நைசாக கழன்று கொண்டாள். என்ன செய்வது என்று தெரியாமல் உடல் வியர்வையில் நனைந்திருக்கையில் பெட்ரோல் டேங்கை திறந்து  பார்த்தேன், ஒருதுளி கூட இல்லாமல் பெரும்பாலான நேரங்களில் வறண்டிருக்கும் காவிரி ஆற்றை போல இருந்தது, அப்போதுதான் ஞாபகம் வந்தது முந்தின நாள் இரவு என் நண்பன் சொன்ன வார்த்தைகள் "வண்டியில ஃபுல் டாங்கு பெட்ரோல் இருக்கு அண்ணா!!!"

எனது அனுபவம் ,
ஊருநாட்டான்