Saturday, July 14, 2012

வேப்பிலையும் வெல்லமும்


வெகுகால நண்பனான கார்த்தியின் ஊருக்கு செல்லவேண்டும் என்பது என் அவா. பலமுறை செல்ல நினைத்தும்  செல்ல இயலவில்லை. அவனுக்கு என்னிடம் கோபித்துகொள்வதே அவனது அன்றாட வழக்கமாக இருந்தது. கடைசியில் ஒருநாள் அந்தநாளும் அமைந்தது, இந்தியாவின் பொருளாதார நெருக்கடி வடிவில். எனக்கு வழங்கப்பட்ட மூவாயிரம் சம்பளத்தை கட்டுப்படுத்தினால் இந்தியாவின் பொருளாதாரத்தை தூக்கி நிலைநிறுத்தி விடலாம் என்று நினைத்தாரோ என்னவோ என் மேலதிகாரி, செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கு ஈயப்படும் என்ற வள்ளுவர் கூற்றை போலல்லாமல் செலவுக்கு பணம் இல்லாத போதும் சிறிதேனும் வயிற்றுக்கு கிடைக்கும் அலுவலக உணவுக்கு வேட்டு வைத்தார் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி. 

ஆகவே வேலையும் பறிபோய் விட்டதால் அவனது ஊரை நோக்கி புறப்பட்டேன் அரசுபேருந்து மார்க்கமாக. நண்பனின் ஊர் நெல்லை அருகில் களக்காடு பக்கம் ஒரு குக்கிராமம். நெல்லையை அடைந்ததும் வேடனின் அம்பு தைத்த பறவையை போல மனது படபடவென்று அடித்துகொண்டது. முதன்முறை அவனது வீட்டிற்கு  செல்கிறோம் கையில் வேறு காசில்லையே? அவர்களுக்கு ஏதாவது வாங்கித்தர வேண்டுமே என்று. அவனுக்கு தெரியும்  எனது நிலைமை , ஆயினும் அவனது வீட்டு பிஞ்சுகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று  இல்லையே? நெல்லை பேருந்து நிலையத்தை அடைந்ததும் குழாயடியில் முகம் கழுவிவிட்டு வெளியிலிருக்கும் பலகாரக்கடைகளை நோட்டமிட்டேன். "ஏ வாங்க அண்ணாச்சி திருநெல்வேலி அல்வா வாங்குறியளா? என்ன பராக்கு பாத்துட்டே நிக்கிய?" என வியாபாரியின் குரல் பலமாக ஒலிக்க  ஆரம்பித்தது. அவர் கடையை விட்டு நகர துவங்கினேன். " ஏல என்ன நான் கூப்டுதேன்லா? அந்த சுரேஷ் பய கடைல எல்லாம் உழுத்து போனது தான் இருக்கு, பாத்துகிடுங்க!" என அவர் தொழிலில் வன்முறையை சிறிது இழையோட விட்டார் இன்னும் அழுத்தமாக. அவர் சொன்ன சுரேஷ் அண்ணாச்சியின் கடையில் எனது பார்வையை ஓட விட்டேன். பளபளப்பாகவே இருந்தன அனைத்து பலகாரங்களும்.
ஆயினும் பக்கத்து கடைக்காரர் விடுவதாக இல்லை. "மின்னுவதெல்லாம் பொன்னல்ல! பாத்துகிடுங்க" என்றார். அவருக்கு செவி சாய்க்காமல் சில பொரி உருண்டைகளை வாங்கி எனது பையில் வைத்த போது சிறிது புன்னகைத்தேன் யாருக்கும் தெரியாமல். பொரி உருண்டைகள் உருவத்தில் பெரியதாக இருப்பதால் எனது பையும் வழக்கத்தை விட பூரிப்பாகவே  இருந்தன. அங்கிருந்து நகர்ந்து களக்காடு செல்லும் பேருந்தில் அமர்ந்தேன். 

பேருந்தில் என்னை தவிர ஒன்றிரண்டு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். நகரத்தை தாண்டி சிறிது நேரத்திலேயே திருநெல்வேலிக்கே உரிய விதத்தில் கிராமங்களில் பேருந்து பயணப்பட துவங்கியது. மலையோரமாக இருந்ததால் இதமான சாரலுடன்  காற்று வீசியது. மழைகாலம் என்பதால் குளங்களும் குட்டைகளும் நீரால் நிரம்பி இருந்தது. பயண அசதியில் இருந்ததால் நடத்துனரிடம் பயணசீட்டு  பெற்ற உடனேயே தூங்க ஆரம்பித்து விட்டேன் கடைசி நிறுத்தம் கார்த்தியின் ஊர் என்பதால். சற்று கண்ணயர்ந்ததும் நானும் கார்த்தியும் ஈரோட்டில் பழகிய நாட்கள் என் மனதில் இழையோடின. அவனுக்கு ஒரு மஞ்சள் மண்டியில் கணக்கெழுதும் வேலை. எனக்கோ ஒரு கரும்புச்சாறு கடையில் கரும்பு அரைக்கும்  பணி. தினமும் பணி முடித்து மாலை வேளையில் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி செய்வது எங்கள் வழக்கம். அவனுக்கு பெரிய விளையாட்டுவீரனாக வேண்டும் என்ற அவா. ஆனால் பொருளாதார நிலையில் அவனால் விளையாட்டுக்கு தேவையான காலணிகள் வாங்க இயலவில்லை. எனவே அந்த ஆசையை ஓரங்கட்டிவிட்டு உடல்நலனை பராமரித்தாலே போதுமானதென்று முடிவெடுத்து தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிகொண்டான். அந்த விளையாட்டு மைதானத்தில் தான் எங்கள் நட்பு துவங்கியது. அதன்பின் அடிக்கடி நான் வேலை செய்யும் கரும்புச்சாறு கடைக்கு  வருவான். நண்பன் என்பதால் முதலாளிக்கு தெரியாமல் அவனுக்கு இலவசமாகவே கரும்புச்சாறுகளை வழங்கி வந்தேன். அவ்வப்போது திரைப்படங்களுக்கு செல்வதும் எங்கள் வார இறுதி நாட்களை இனிமையாக்கி வந்திருக்கின்றன. 

திரைப்படங்களுக்கு செல்ல காசில்லாத நாட்களில் காவிரி ஆற்றின் கரைக்கு சென்று ஊர் கதைகள் பேசுவோம். விவசாயத்தின் மேல் அவனுக்கு நாட்டம் இருந்தது. ஆனால் விவசாயம் இப்போது நல்ல நிலைமையில் இல்லை  என்று அலுத்துக்கொள்வான். இன்னும் கொஞ்ச நாட்களில் விவசாயம் அழியப்போகிறது நமது நாட்டில் என்றும், அதற்கான விளக்கமும் தருவான். "எனது பாட்டனார் காலத்திலிருந்து அனைவரும் விவசாயம் தான் செய்கின்றனர். ஆனால் எனது தலைமுறை விவசாயத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. விவசாயகுடும்பத்தில் பிறந்த நான் இன்று விவசாயம் செய்யாமல் கணக்கெழுதுகிறேன். என்னைப்போல எனது ஊரில் அனைவரும் நகரத்தை நோக்கி புறப்பட்டு விட்டனர். இனிமேல் எப்படி தான் விவசாயம் செழிக்க போகிறதோ?" என்று அடிக்கடி அவன் விவசாயத்தின் மேல் இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்துவான். அவன் சொல்லுவதை ஆமோதிப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை. ஏனென்றால் விவசாய குடும்பத்தில் பிறந்து நானும் நகரத்துக்கு வந்து வேறு வேலை செய்வதால்.

திடீரென்று ஒரு நாள் இரவு அவன் ஊரிலிருந்து அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரவே சொல்லாமல் கொள்ளாமல் அன்றே இரவோடு இரவாக புறப்பட்டு சென்றுவிட்டான். மறுநாள் அவன் அறையில் வசிக்கும் சக அறைவாசியிடம் விசாரித்தபோதுதான் சொன்னார் கார்த்தி கிளம்பிவிட்டதை. வயதான தாய், தந்தை, ஒரு விதவை அக்காவும் சில குழந்தைகளும் இருப்பதாக சொல்லி இருக்கிறான். அவர்களில் யாருக்கோ தான் என்னமோ ஆகிவிட்டதோ என்று மனதில் நினைத்துகொண்டேன். மனதில் நெருடலாக இருந்தது இவ்வளவு நாள் பழகியும் சொல்லாமல் சென்றுவிட்டானே என்று. வழக்கம்போல கரும்பு அரைக்கும் பணியில் மூழ்கிவிட்டேன். அரவை இயந்திரத்தின் வேகத்தைபோலவே வருடங்களும் வேகமாக ஓடிற்று. அதன்பின் நான் அந்த கரும்புச்சாறு கடையில் பணியிலிருந்து நின்றுவிட்டு, ஒரு உள்ளூர் தொலைகாட்சி நிலையத்தில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தேன். விளம்பரங்கள் சரிவர கிடைக்காத காரணத்தால் அங்கு ஆட்குறைப்பு செய்யவேண்டும் என்று அதன் முதலாளி உத்தரவிட எனது மேலதிகாரி என்போன்ற இன்னும் ஒன்றிரண்டு பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டார்.
அறையில் வந்து இனி என்ன செய்வதென்று யோசனையில் இருக்கையில் பழைய டயரியில் இருக்கும் முகவரிகளை புரட்டினேன். கண்ணில்  கார்த்தியின் முகவரியை பட்டது.  அவன் ஊருக்கு சென்று அவனைப்பார்த்து விட்டு வரலாம் என்று தோன்றியது. யோசனையினூடே ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் கண்ணயர்ந்து விட்டேன். பக்கத்து வீட்டு சாந்தி அக்கா  வாசலில் கோலமிட தண்ணீர்  தெளித்து கொண்டிருந்தாள். அதில் ஒரு துளி என் முகத்தில் விழ முகத்தை துடைத்தேன். பேருந்தின் ஜன்னல் வழியே மழை நீர் எனது முகத்தை நனைத்தது.  சாரல் மழை இன்னும் வேகமேடுத்திருந்தது. கார்த்தியின் ஊரை நெருங்கி விட்டதை பேருந்தின் நடத்துனர் உரத்தகுரலில் சொன்னார் "இதுதான் கடைசி நிறுத்தம் எல்லாரும் இறங்குங்க" என்று. பேருந்திலிருந்து இறங்கி அருகிலிருந்த  கடையில் தேநீர் வாங்கி அருந்தி விட்டு கார்த்தியின் முகவரியை காண்பித்து விசாரித்தேன். அங்கு தேநீர் அருந்திக்கொண்டிருந்த அனைவரும் என்னை பார்த்து முறைத்துகொண்டே வழி சொல்லாமல் சென்று விட்டனர். கடைக்காரரிடம் காசு கொடுத்துவிட்டு மீண்டும் நடக்க துவங்கினேன்.

பள்ளி சென்று திரும்பிய மாணவர்கள் எதிரில் பட்டனர்.அவர்களிடம் முகவரியை காண்பித்து வழி கேட்டேன். அதில் ஒரு பொடியன் " அண்ணாச்சி எனக்கு இந்த ஊருதான், வாங்க வழி சொல்லுதேன்" என்றான். போகும் வழியில் அவன் ஊரிலுள்ள இடங்களை பற்றி சொல்லிக்கொண்டே வந்தான். "இதுதான் எங்க ஊர் பண்ணையாரின் வீடு, எவ்ளோ பெருசா இருக்கு பாத்தியளா அண்ணாச்சி?" என்றான். அந்த வீட்டை தாண்டி ஒரு அக்ரகாரம் மிக அழகான வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருந்தது. "இங்க தான் எங்க ஊர் கோவில் ஐயனுங்க வீடு இருக்குது, நீங்க கோவிலுக்கெல்லாம் போவியளா? உங்களை பார்த்தால் கிறிஸ்தவரை போல இருக்கே? நானும் கிறிஸ்தவன்தான் நான் இந்த அக்ரகாரத்து கோவிலுக்கெல்லாம் போவேன்" என்றான். எம்மதமும் சம்மதம் உணர்வாளன் போல என நினைத்தேன். "இந்த கோவில்ல புளியோதரை ரொம்ப நல்லா இருக்கும், சாப்பிட்டு பாருங்க, அப்புறவு தினமும் இங்க வருவிய" என்றான். அப்போதுதான் விளங்கியது  அவனுடைய எம்மத சம்மத உணர்வு. "தோ தெரியுது பாத்தியளா? அதான் நீங்க விசாரிச்சு வந்த முகவரி, சூதுவாதா போயிட்டு வாங்க" என்றான், புரியாமல் தலையசைத்துவிட்டு அவன் காண்பித்த வீட்டை நோக்கி நடந்தேன். 

மலையடிவாரத்தில் சுற்றிலும் வயல்வெளி நடுவில் பனைமரங்களும் பாக்குமரங்களும் சூழ்ந்திருந்தது அந்த குடிசை. சில வாழை மரங்கள் குலை தள்ளியும் அறுவடை செய்யாமல் நின்று கொண்டிருந்தன. இயற்கையை ரசித்து கொண்டே குடிசையை நெருங்கினேன். வீட்டில் ஆள் அரவம் இல்லாமல் இருந்தது. விவசாய வேலைகளுக்கு சென்றிருப்பார்கள் என நினைத்தேன். அங்கே இருந்த சுமைதாங்கியில் பையை வைத்துவிட்டு அதன் அருகில் அமர்ந்தேன். சற்று நேரம் சென்று ஒரு நடுத்தர வயதையொட்டிய ஒருவர் அழுக்கு உடை, வெகுநாள் தாடியுடன் நான் அமர்ந்திருப்பதைகூட கவனிக்காமல் என்னை கடந்து சென்றார் வீட்டினுள்ளிலிருந்து. நான் பலமாக குரல் கொடுத்தும் என்னை சீண்டாமல் சென்றுவிட்டார். அதன் பின் வெகுநேரம் அங்கு அமர்ந்திருந்தும்  வீட்டிலோ வீட்டை சுற்றியோ யாரும் தென்படாததால் வாங்கி வந்த பொரி உருண்டைகளையும்,  எனது தொடர்பு விவரங்களையும் ஒரு காகிதத்தில் எழுதி அங்கு வைத்து விட்டு புறப்பட்டேன் கனத்த இதயத்துடன்.

மீண்டும் அந்த தேநீர் கடையின் அருகில் வந்து  அடுத்த பேருந்து எப்போது என்று விசாரித்தேன். " பேருந்து எல்லாம் போய்டுச்சு பாத்துகிடுங்க, இனிமேட்டு காலைல தான் அடுத்து வரும்" என்றார். என்ன செய்வது என யோசிக்கையில் அவரே தொடர்ந்தார், "இந்த கடை ஓரமா படுத்துகிடுங்க காலைல தான் இனிமேட்டு வண்டி வரும், எதாச்சும் சாப்டியளா?" என்றார்.கார்த்தியின் ஞாபகமாகவே இருந்ததால் உணவை பற்றி யோசிக்கவில்லை. "அந்த கிறுக்கு பயல பாக்க எதுக்கு போனிய? உங்களுக்கு  உடமைகாரங்களா?" என்றார். கார்த்திய கிறுக்கு பயனு சொல்றாரே என்று கோபம் கொள்வதற்குள் மீண்டும் அவரே தொடர்ந்தார். "அந்த பயலோட அப்பனும் ஆத்தாளும் ஊருல நிறைய பேரு கிட்ட கடனை வாங்கி விவசாயம் பண்ணிட்டு இருந்தாவ தம்பி, ஒரு ஆடி மாசம் பெய்ஞ்ச பேய் மழைல பயிர் அம்புட்டும் நாசமாயிடுச்சுன்னுட்டு அந்த பயலோட அப்பனும் ஆத்தாளும் அக்கா பிள்ளையளும் விஷத்த குடிச்சிட்டு போய் சேந்திச்சுங்க,  இந்த பய அப்புறமேட்டு வந்தான், அவங்களை எல்லாரையும் அடக்கம் பண்ணிட்டு நாங்க பைசாவ கேக்க ஆரம்பிச்சதுலேருந்து கிறுக்கு பய மாதிரி நடிச்சிட்டு  திரியிறான். அவன் அப்பன் காப்பி தண்ணி குடிச்சதுல எனக்கு எண்பத்தியேழு ரூபா அம்பது பைசா பாக்கி தம்பி, உங்களுக்கு ஏதாச்சும் தரணுமா அந்த பய?" என்றார். 

இடி இடித்து பேய் காற்றுடன் பெரு மழை பெய்ய துவங்கியது. அதில் ஒரு இடி அருகிலிருந்த பனைமரத்தின் மேல் விழுந்தது. அந்த இடி எனது இதயத்தில் இறங்கியதைப்போல  இருந்தது தேநீர் கடைக்காரர் சொன்ன கார்த்தியை பற்றி சொன்ன தகவல். ஆற்றொணா துயரத்துடன் அங்கிருந்து கிளம்பினேன் கார்த்தியின் வீட்டை நோக்கி. "ஏல இங்க படுத்திட்டு காலைல போலாம் லா?" என்றார். அவர் குரலை சட்டை செய்யாமல் புறப்பட்டேன். மழை நீர் எனது உடையை நனைத்து ஈரமாக்கி இருந்தது. கார்த்தியின் வீட்டை நெருங்கினேன். எனது முகவரி எழுதி வைத்திருந்த காகிதம் மழை நீர் பட்டு கிழிந்து போய் இருந்தது எனது இதயத்தை போல. வெகு தொலைவில் ஒரு நாய் குரைத்து கொண்டிருந்தது. "அந்த கிறுக்கு பய வரான்னு நெனைக்கேன்" என்றார் பக்கத்து வீட்டு கிழவி...! எனது நண்பனின் வருகைக்காக காத்திருந்தேன் கடைக்காரர் சொன்னது போல கார்த்தி கிறுக்கன் போல நடிக்கிறான் என்ற நம்பிக்கையில். தூரத்தில் கேட்ட நாயின் குரல் இப்போது அருகில் கேட்க துவங்கியது...!

1 comment: