Friday, July 13, 2012

சட்டை செய்யாத சேட்டை காலம்...! (Carefree Childhood Days...!)

பள்ளி செல்லும் நாட்களில், காலை நேரம் விடிந்ததும் எமனோட ஏஜண்டை லாரி ரூபத்தில் பார்க்கும்போது  பயப்படும் தவளையை போல தினம் காலையில் எனது தந்தையார் என்னை வந்து உறக்கம் கலைக்கும்போது பயந்து கொண்டே எழுந்து காலைக்கடன்களை நிறைவேற்றுவேன். பிறகு  குளித்து முடித்து அம்மையார் தரும் காலை டிபனை வயிற்றினுள் திணித்து விட்டு புறப்படும்போது கடைசியாக ஓன்று நடக்கும், ஆம் `பவுடர்`!  மகன் கருப்பாக இருப்பதால் கோபம் கொள்ளும் அம்மா கோபத்தை பவுடர் மேல் காண்பித்து, பவுடரை கறுப்பாக்கும் வேலையில் இறங்குவார். அப்போது பவுடரை கண்டுபிடித்தவருக்கு மனதில் மன்னிப்பு கேட்டுகொள்வேன்!. அதன் பிறகு புத்தகப்பையை(இன்றைய பள்ளி குழந்தைகளைபோல இல்லை. அதிகம் உணவு கொஞ்சம் புத்தகம்!!!) எடுத்துகொண்டு  புறப்படுவோம். 

எங்கள் ஊருக்கு வருவது ஒரேயொரு பஸ் மட்டுமே. அதில் ஏற முயற்சிப்போம் நானும் எனது நட்பு வால்களும். ஆனால் அந்த பஸ்ஸில் ஏறுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஆயக்கலைகள் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். குங்பூ, கராத்தே, குத்துச்சண்டை, மல்யுத்தம் இன்னும் கொஞ்சம் கெட்ட கெட்ட வார்த்தைகள் தெரிந்திருந்தால் மட்டுமே அந்த வண்டியில் ஏற முடியும். அப்படியும் ஏற முடியாது. ஏனென்றால் என் வயதையொட்டிய அனைத்து மாணவர்களும் ஆஜானபாகு உடல்பலம் மிக்கவர்கள். நானோ சுண்டெலி! நடுவில் நுழைந்து விடலாம் தான், ஆனால் உயிருக்கு இத்த்ரவாதம் கிடையாது. அதையும் மீறி உள்ளே செல்லலாம் என்றால் உள்ளே ஆக்சிஜன் குறைபாடு உள்ள பிரதேசம் போல இருக்கும் அந்த பஸ்சின் உள்பாகம். நம்மூரில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதி இல்லாத காரணத்தால் அந்த பஸ்ஸை வெகு நாட்கள் வெளியிலிருந்து பார்ப்பது மட்டுமே சாத்தியம்.

ஆகவே பெரும்பாலான நாட்கள் வயல்வெளியில் நடந்தே செல்வது வழக்கம். வயல்வெளி எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை. அந்த வயல்வெளியில் நடந்து செல்வது பல உணர்வுகளை எங்களுக்கு அளித்ததுண்டு. ஆம் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிக்கு கடும்போட்டி அளித்திருக்கிறோம் எங்கள் காகித கப்பல் மூலமாக. போகும் வழியில் நெல்கதிர், வாழைப்பழம், கிழங்கு வகைகள், வெள்ளரி பிஞ்சு இவை அனைத்தும் கிடைக்கும் இலவசமாக. ஆனால் ஒரு திறமை கண்டிப்பாக இருக்க வேண்டும், வயலின் உடைமையாளர் வரும்போது கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடுவது தான் அந்த திறமை. 

அவ்வாறாக தினமும் ஓட்டமும், வீர(!) நடையுமாக வயல்வெளியில் செல்லும் நாட்களில் ஒரு நாள் எனது நண்பனின் ஒரு ஐடியா, மறுநாள்  பள்ளியை மட்டம் போடுவது என்று, நான்கு நண்பர்கள் முடிவெடுத்தோம் முதன்முறையாக. காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போது அம்மாவிடமிருந்து பவுடரை காப்பாற்றி(!) விட்டு வேக வேகமாக பள்ளிக்கு (!)புறப்பட்டோம். மாஸ்டர் பிளான் ரெடி செய்தோம். கிழங்கு அவித்து, மீன் பிடித்து சுட்டு சாப்பிடுவது என்று. வீட்டிலிருந்து கிளம்பும்போதே எடுத்து வைத்திருந்த கலர் சட்டையும் கலர் பேண்டும் வயலிலேயே மாற்றிவிட்டு குளக்கரைக்கு சென்றோம்.ஏனெனில் எங்கள் ஊர் பெருசுகள் பள்ளி சீருடையில் இருந்தால் கண்டுபிடித்து வீட்டில் சொல்லி விடுவார்கள். எங்கள் ஊரில் எங்கு பார்த்தாலும் குளமும் ஓடையும் ஆறுமாக இருப்பதால் மீன் கிடைப்பது சிரமமான காரியமல்ல. துணியை கழற்றி குளக்கரையில் வைத்து விட்டு எனது தந்தையாரின் வேட்டியை உபயோகித்து மீன் பிடிக்க ஆரம்பித்தோம். சில நிமிடங்களிலேயே எங்களுக்கு தேவையான மீன்கள் கிடைத்து விட்டன. 

அடுத்ததாக கிழங்கு புடுங்க வேண்டும். இந்த மாதிரியான விஷயங்களுக்கு நான்தான் லாயக்கு என்று எனது நண்பர்கள் முடிவெடுத்து விடுவார்கள். காரணம் சேட்டையை ஆரம்பித்து வைத்து அதிகம் மாட்டிக்கொள்வது நானல்லவா? அதுபோல அன்றும் நான் தான் கிழங்கு பிடுங்க ஒரு வயலுக்குள் நுழைந்து கிழங்கு பிடுங்கி ஓட்டபந்தய வீரனுக்கு நிகராக ஓடிவந்து பக்கத்து ரப்பர் தோட்டத்து பாறைகளுக்கிடையில் புகுந்து கொண்டோம். அங்கே மூன்று கற்களை அடுக்கி ஆதிமனிதன் டெக்னாலஜியை அரங்கேற்றினோம். கிழங்கு மற்றும் மீனை வேக வைத்து சாப்பிட துவங்கினோம்.அவ்வேளையில் அங்கு ஒருவர் சென்றுகொண்டிருந்தார். நான் அவரை சாப்பிட அழைத்தேன், நாம் தான் அன்னத்தை பிட்டுவாழும் தமிழர்களாச்சே? 

அவரும் வந்து வயிறார உண்டுவிட்டு "பசி மயக்கத்தில இருந்தேன், நல்லவேளை நீங்கள் அழைத்து உணவு கொடுத்தீர்கள், மிக்க நன்றி" என்றார். "பரவாயில்லீங்க" என்றோம் ஒத்தகுரலில். "நன்றி தம்பி நான் கிளம்புறேன், ஆமா கிழங்கு எங்க வாங்கினீங்க? நல்ல ருசியாக உள்ளது" என கேட்க, நான் முந்திரிக்கொட்டையாக "எவனோ எலியாஸ் கு சொந்தமான தோட்டமாம், அந்த ஆள் தோட்டத்தில் தான் பிடுங்கினோம்" என்று சொல்லி மீண்டும் மீன் முள்ளின் மேல் கவனம் செலுத்தினேன். 

சொல்லி முடித்ததும் என்னை பிடரியில் பிடித்து கொத்தாக தூக்கி முதுகில் ஒரு அப்பு அப்பினார்  . "அடப்பாவி மக்கா எங்களிடமே வாங்கி தின்று விட்டு என்னையே அடிக்கிறாயே?" என்று ஆத்திரமுற்றபோது  தான் அவர் சொன்னார் "எனது தோட்டத்தில் திருட்டுத்தனமாக பிடுங்கிய கிழங்கை எனக்கே சமைத்து குடுக்குறாயா?" என்று. அப்போதுதான் தெரிந்தது அந்த `எலியாஸ்` அவர்தான் என்பது. குருவி கூட்டத்தில் கல் எறிந்தால் குருவிகள் சிட்டாக பறப்பதை போல கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் நண்பர்கள் என்னை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் சூப்பர்சானிக் வேகத்தில்...! என்னை தரதரவென்று இழுத்துக்கொண்டு எனது பெற்றோரின்  முன்னால் என்னைக்கொண்டு வந்து  நிறுத்தினார் நீதிகேட்க, மனுநீதி சோழன் முன்பு சென்று முறையிட்ட பசுவைப்போல. எனது தந்தையிடம் தேர் இல்லாத காரணத்தால் உழவுக்கு பயன்படுத்தும் ஏர் பிரம்பால் பின்னி எடுத்து விட்டார். அன்றுமுதல் பைபிளில் கூட எலியாஸ் பற்றிய கதைகள் படிப்பதை நிறுத்திவிட்டேன்.

அதன்பின் வயல்வெளி யாத்திரைகளை குறைத்துக்கொண்டு நீர் மார்க்கமாக செல்லலாம் என்று முடிவெடுத்து எங்கள் ஊரில் விவசாயத்திற்காக பயன்படும் கால்வாயை தேர்ந்தெடுத்தேன். பேச்சிப்பாறை அணையிலிருந்து எங்கள் ஊரை கடந்து செல்லும் அந்த கால்வாயில் தான் எனது புனித பயணம்(!) துவங்கியது. தினம் மாலை வேளையில் பள்ளி முடிந்ததும் செருப்பாலூர் என்ற ஊரிலிருந்து நீர் வழி பயணம் துவங்கும். பள்ளியிலிருந்து வீட்டுக்கு குறுக்கு வழியில் வரும் தொலைவைவிட இருமடங்கு அதிகம் செருப்பாலூருக்கு செல்லும் தூரம். பள்ளியிலிருந்து செருப்பாலூரை கடந்து செல்லும் ஏதாவது பஸ்சின் பின்புறத்தில் இருக்கும் ஏணியில் பிடித்து தொங்கி கொண்டே சென்று செருப்பாலூரை அடைந்து அதன்பின் நீர் வழி பயணம் துவங்கும். 

கால்வாய் ஓரத்தில் சென்று சட்டை, கால்சட்டை, பாதணி இவற்றை புத்தகப்பையில் திணித்து விட்டு, அங்கேயே வாழை மரத்தை தேடி கண்டுபிடித்து அதனை கட்டுமரமாக்கி அதன் மேல் புத்தகப்பையை வைத்துவிட்டு நீர்வழி பயணம் துவங்கும். எங்கள் ஊர் சக நண்பர்களும், பெண்களும் என்னை வித்தியாசமாக பார்த்துகொண்டே நடையை கட்டுவார்கள். அதில் ஒரு பெண் "உன்னையெல்லாம் பெத்தாங்களா செஞ்சாங்களாடா? திருந்தவே மாட்டியாடா?" என்று கேட்டதும் உண்டு. சில நாட்கள் அவள் என்னைபார்த்து முறைப்பதும் அதன் பின் நான் திருந்த வாய்ப்பே என்று நினைத்து அவள் நடையை கட்டி விடுவாள். 

பின்னொருநாள் மாலை நேரம் என்னிடம் வந்து "என்னால் எனது புத்தகப்பையை தூக்க முடியவில்லை, எனது பையையும் அந்த வாழை மரத்தின்மேல் வைத்து கொண்டு வந்து தருகிறாயா?" என்று கேட்டாள். இதற்க்காகத்தானே காத்திருந்தாய் பாலகோபாலா? என்று மனதில் நினைத்து எனது கட்டுமரம் நீரில் தலை அசைத்தது. ஆயினும் அவள் மீது மிக்க கோபத்தில் இருந்ததால் இவளுக்கு நாம் யார் என்று காட்டி விட வேண்டும் என நினைத்து "சரி" என்றேன். 
அவளுடைய பையையும் எனது பையின் அருகில் வைத்துகொண்டு குற்றாலீசுவரன் ஆங்கில கால்வாயை கடந்ததைப்போல கால்வாயில் நீந்த துவங்கினேன்.

சிறிது நேரத்தில் அவள் ஊர் வந்துவிட்டது, அவள் பையை கேட்க துவங்கினாள். ஆனால் நான் ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பல் குர்ஸ்கை போல மூழ்கியவாறே நீந்த துவங்கினேன். அவள் கத்திக்கொண்டே இருந்தாள். ஆயினும் செவி சாய்க்காமல் நீந்த துவங்கினேன். அவள் தொண்டை தண்ணி வற்றும் நேரம் வரும்போது அவள் ஊரை தாண்டி வெகு தூரம் வந்து விட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் என் ஊரும் வந்து விட்டது. எனது புத்தகப்பையை எடுத்துக்கொண்டு கரைக்கு வந்துவிட்டேன். அந்நேரத்தில் அவள் அழுது அழுது கன்னம், வெற்றிலை போடும் என் அப்பத்தாவின் நாக்கைபோல சிவந்திருந்தது. எனினும் அவளுக்கு புத்தகப்பையை எடுத்து தராமல் கரையேறி ஓடிவிட்டேன் . அடுத்த அரைமணி நேரத்தில் அவளும் அவள் தந்தையும் எனது வீட்டு காலிங் பெல்லை அழுத்தினார்கள் மனுநீதிச்சொழனின் நீதிமணியின் நினைப்பில். மறுபடியும் மனுநீதிச்சோழன் வீட்டிலிருந்து வெளியே வந்தார் பிரம்புடன், பிரம்பை பார்த்த நான் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிக்கொண்டிருந்தேன் வெகு தூரத்தில்...!  

சேட்டை தொடரும்...!


No comments:

Post a Comment